வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறைப் போராட்டமானது 3000 ஆவது நாளைக் கடந்து இன்னமும் தொடருகின்றது. இந்நிலையில், வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்கிற தாயாரும் இந்தப் போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்று வந்த நிலையில் நேற்று (24/02/2025) தனது 79 ஆவது வயதில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.
வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார். தனது மரணத்துக்கு முன்பதாகக் காணாமலாக்கப்பட்ட தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய இன்னுமொரு தாய் ஏக்கம் நிறைவேறாமலே இம்மண்ணை விட்டு மறைந்துள்ளார்.