Home இலங்கைபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்

by editorenglish

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும் என்றும் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மக்களின் கருத்துக்குப் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்கத் தாம் தயாராகவே இருப்பதாகவும், இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்,  சுகாதார அமைச்சருமான நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (24/02/2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

“பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலேயே ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அத்துடன் வரவு செலவுத் திட்டத்துக்குப் பல பெயர்களையும் சூட்டுகிறார்கள். மக்களுக்குப் பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்குச்  சூட்டிக் கொள்ளட்டும்.

நாட்டு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்  நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தத் தரப்பினரும்  புறக்கணிக்கப்படவில்லை.

வரவு செலவுத்திட்டத்தில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. புதிய யாப்புருவாக்கம் குறித்து ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத்  தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

புதிய அரசியலமைப்பு  ஒன்று உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அதிகரிக்காமலும், குறைக்காமலும் எவ்வித மாற்றமில்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில்  பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், நாடாளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டுப் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம், அதற்குத் தயாராகவே உள்ளோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ள  வேண்டும். அப்போது தான் புதிய அரசியலமைப்பை சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, புதிய யாப்பினை உருவாக்குவோம்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறைக்கு அதிக நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் சம்பளம் 80 சதவீதத்தால் வளர்ச்சிப் பெறும். வரவு செலவுத் திட்டத்தின்  முன்மொழிவுகள்  செயற்படுத்தப்படும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது” என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More