இந்த நாட்டில் பாதாள உலகச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தேசியவாதமும் தீவிரவாதமும் வரலாற்று ரீதியாக தேசிய பாதுகாப்பிற்குக் கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன என்று கூறிய ஜனாதிபதி, இலங்கையில் அத்தகைய தேசியவாதம் மீண்டும் தலைதூக்கத் தமது தேசிய மக்கள் சக்தி அரசானது இடமளிக்காது என்றும் அழுத்திக் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்து, பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (28/02/2025) நாடாளுமன்றத்தில் 2025 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக பதில் உரை ஆற்றித் தொடர்ந்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதாரச் சரிவு என்ற மாயையை உருவாக்கியோ, பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்கியோ, அல்லது பொது அமைதியின்மையைத் தூண்டியோ, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எதிர்க்கட்சிகளின் கனவானது நனவாகத் தனது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று ஜனாதிபதி மேலும் உறுதியாகக் கூறினார்.