காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கத் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது என்று இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரமலான் மற்றும் “பாஸ்ஓவர்” எனப்படுகின்ற யூதர்களின் வசங்காலத் திருவிழா ஆகிய பண்டிகைகளுக்காக இவ்வாறு காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் அலுவலகம் இன்று (02/03/2025) அதிகாலை தெரிவித்துள்ளது. முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகவிருந்த சில மணிநேரங்களில் இதனை இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விட்காஃப் முன்மொழிவின் படி உடன்பாட்டின் முதல் நாளில், காசாவில் உயிருடன் மற்றும் இறந்த பணயக்கைதிகளில் பாதிப் பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது, மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தரப் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிரந்தரப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அதிக நேரம் தேவை என்பதை உணர்ந்த பின்னர், தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிக்க விட்காஃப் முன்மொழிந்ததாக நெதன்யாகுவின் அலுவலகம் மேலும் கூறியது.
ஹமாஸ் ஒப்புக்கொண்டால், விட்காஃப்பின் திட்டம் குறித்து இஸ்ரேல் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. “ஒப்பந்தத்தின்படி, பேச்சுவார்த்தைகள் பயனற்றவை என்று இஸ்ரேல் உணர்ந்தால், 42வது நாளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் போரிற்குத் திரும்பலாம்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் மேலும் கூறியதுடன் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாகவும் குற்றஞ் சாட்டியது. ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை குறித்து நன்கு தெரிந்த இரண்டு பாலஸ்தீன அதிகாரிகள், இஸ்ரேல் ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தில் நுழையவோ அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவோ மறுத்துவிட்டதாக ரொய்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.
அதற்குப் பதிலாக, ஒவ்வொரு வார நீட்டிப்புக்கும் பல உயிருள்ள கைதிகள் மற்றும் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருக்கும் முதல் கட்டத்தை நீட்டிக்குமாறு இஸ்ரேல் முன்னர் கோரியிருந்தது. இருப்பினும், இதை நிராகரித்த ஹமாஸ், இரண்டாம் கட்டத்தில் நுழையவும், இஸ்ரேல் ஒப்புக்கொண்டதை நிறைவேற்றவும் வலியுறுத்தியது.
சனிக்கிழமையன்று, ஹமாஸின் ஆயுதப் பிரிவு, காசாவில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் தங்கள் காவலில் இருப்பதைக் காட்டும் ஒரு காணொளியை வெளியிட்டது. மேலும் ஜனவரி 19 அன்று தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, கட்டங் கட்டமாக மீதமுள்ள பணயக்கைதிகளைப் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் மட்டுமே விடுவிக்க முடியும் என்று அழுத்திக்கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.