முதற்கட்டப் போர் நிறுத்தம் முடிவடைந்ததும், அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளும் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தடுக்கிறது. காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளும் நுழைவதை இஸ்ரேல் நிறுத்துகிறது, மேலும் போர்நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைவதன் மூலம் போர்நிறுத்தத்தைத் தொடர்வது குறித்து எந்தவொரு உடன்பாடும் இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற் கட்டம் முடிவடைந்ததும், போர் நிறுத்தத்தை மறுத்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதைக் கூட இஸ்ரேல் தடுத்திருக்கின்றது.
முன்னதாக, காசாவில் மீதமுள்ள கைதிகளில் பாதி பேரை விடுவித்தால், ரமலான் மற்றும் யூதர்களின் வசந்தகாலப் பண்டிகையான “பாஸ்ஓவர்” காலப்பகுதியில் காசாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்காக அமெரிக்க கொண்டுவந்த திட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக நேற்று (02/03/2025) காலை இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
காசாவில் நிரந்தரப் போர்நிறுத்தத்தை எட்டுவதற்காக ஜனவரியில் இஸ்ரேல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இதற்கான மறுமொழியாகக் ஹமாஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகள் மற்றும் அழிவுக்கு மத்தியில், முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் முதல் நாள் நோன்பு நேற்றுத் தொடங்கியிருக்கும் வேளை, மீண்டும் போர் தொடங்குமோ என்ற அச்சத்தில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் போரில் 48,388 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளதாகவும் 111,803 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அரசாங்க ஊடக அலுவலகம் இந்த இறப்பு எண்ணிக்கையை 61,709 என இற்றைப்படுத்தியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்துவிட்டதாகக் கருதியே இந்த இறப்பு எண்ணிக்கை இற்றைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.