112




நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு நெடுந்தீவு மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் பங்கேற்றனர். குறித்த சந்திப்பில்,
வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்த நிலையில் அதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை நெடுந்தாரகைப் படகுக்கு பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்தார்.
நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தப் படகு திருத்தத்துக்கான நிதி ஐ.ஓ.எம். நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் நிர்வாகச் சிக்கல் காரணமாக அந்த நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார்
நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.
நெடுந்தீவு கடற்கரையோரத்தைச் சூழ தடுப்பணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும், பெருமளவு நிதி ஒதுக்கீடு இதற்குத் தேவை என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நெடுந்தீவில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்த பிரச்சினைக்கு ஆளுநர் உடனடியாகத் தீர்வை வழங்கினார். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரினர்.





Spread the love