Home இலக்கியம் அலை அ.யேசுராசாவும் ஓவியர் அ.மாற்குவும்: நவீன ஓவியத்துக்கான பயணங்கள்… பேராசிரியர் சி.ஜெயசங்கர்.

அலை அ.யேசுராசாவும் ஓவியர் அ.மாற்குவும்: நவீன ஓவியத்துக்கான பயணங்கள்… பேராசிரியர் சி.ஜெயசங்கர்.

by admin

அலை அ.யேசுராசாவும் ஓவியர் அ.மாற்குவும்: நவீன ஓவியத்துக்கான பயணங்கள்…

அ. யேசுராசா அவர்களது அலை சஞ்சிகை மூலமாகவே ஓவியர் அ.மாற்குவின் படைப்புகள் எனக்கு அறிமுகமாக தொடங்குகின்றன. அலை சஞ்சிகையே தனது வாசகப் பரப்பிற்கு நவீன ஓவியத்தையும் மாற்குவையும் அறிமுகப்படுத்தியது.

நவீன ஓவியத்தை மட்டுமல்லாது சிற்பம், சினிமா, புகைப்படக்கலை, மொழிபெயர்ப்புகள், கலைக் கோட்பாடுகள், கலை இலக்கிய விமர்சனங்கள், நாடகங்கள், விவாதங்கள், நேர்காணல்கள், இசை என புதிய தளங்களுக்கும் வாசகர்களை விரித்துச் சென்றிருக்கின்றது.

குறிப்பாக சோசலிச யதார்த்த வாதமே கலைக் கோட்பாடு என்றும், கலை இலக்கியங்களில் உருவகம் அல்ல உள்ளடக்கம் தான் முக்கியம் என்றும் முற்போக்கு இயக்கம் என்ற பெயரிலான மேலாதிக்கநிலைப்பட்ட கருத்துச் சூழலுக்குள் கலையின் இயல்பானதும், மெய்யானதுமான பரிமாணத்தை சிறுகதை, கவிதை, நாவல் என்ற இலக்கிய வகைகள் தாண்டியும் கலை இலக்கியங்களின் பல்வேறு வகைப்பாடுகளின் முன்னெடுப்புக்களிற்கும் களமாக அலை இயங்கியது. சமூக நோக்கத்துடன் கூடிய கலையின் புதிய சாத்தியப்பாடுகளுக்கு களமாக இருந்தது.

முக்கியமாக கலை இலக்கியங்களில் உருவம் உள்ளடக்கம் சார்ந்த விவாதம் தமிழில் தொடங்கி “லங்கா காடியன்” ஆங்கிலச் சஞ்சிகைக்கும் விரிவு கண்டது. ஈற்றில், கலை இலக்கியங்களில் உருவம் உள்ளடக்கம் பிரிக்க முடியாது என்ற ஷெல்லியின் இங்கிலாந்தின் மக்களுக்கான பாடல் உதாரணத்துடனான றெஜி சிறிவர்தனாவின் கட்டுரைக்குப் பின்னர் பதிலெதுவுமற்று அந்த விவாதம் முற்றுப் பெற்றது.

இந்தவகையில் தமிழ்ச் சூழலில் கலை இலக்கியங்களின் பல் வகைமைகளையும் அவற்றின் பல்வகை பரிணாமங்களையும் “அலை” வெளிக்கொண்டு வந்திருந்தது. இதில் ஓவியம் பற்றிய ஈடுபாடு எழுத்துடன் மட்டுப்பட்டுப் போய்விடவில்லை.

ஓவியர் அ. மாற்குவின் ஓவியங்களை காட்சிப்படுத்தல், மேற்படி காட்சிப்படுத்தற் சூழலில் உரையாடல்களை முன்னெடுத்தல், அவற்றை ஆவணப்படுத்தல், ஆவணத்திரைப்படமாக்கல், கலை இலக்கியங்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதற்கான அ.மாற்க்குவின் பயணம்
அ. யேசுராசா அவர்களது துவிச்சக்கர வண்டியிலேயே நிகழும். மாணவர்களுடன் நிலக்காட்சி ஓவிய வரைவிடங்களுக்கான பயணம் ஓவியக் கலைஞர்களை சந்திப்பதற்கான பயணம் வாராந்த உரையாடல்களுடன் களங்களிற்கான பயணமென குழுநிலை சார்ந்த பயணங்களும் இதிலடங்கும்.

ஓவியர் அ. மாற்குவை அவரது ஓவியங்களை வெளிக்கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்ததுமல்லாமல் அவரது ஓவியங்களை அதுவும் மிகவும் எளிதில் பாதிப்படைந்து விடக்கூடிய ஓவியங்களை, சிற்பங்களை மிகவும் அவலம் நிறைந்த போர், இடப்பெயர்வுக் காலங்களிலும் மிகவும் பக்குவமாய்ப் பாதுகாத்திருப்பதும் பெரிதும் மதிக்கப்பட வேண்டிய விடயமும், மிகவும் கவனத்திற்குரிய படிப்பினையும் ஆகும். இதனை எழுத்துக்களில் பதிவுக்குக் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் பலத்த சிரமங்களுக்குள் பாதுகாத்தும் வைத்திருந்தது வார்த்தைகளுள் அடங்காத அரும்பெரும் பணியும், பின்பற்ற வேண்டிய பணியுமாகும்.

இந்த வகையில் ஓயாத ஒரு படைப்பாளியின் பயணத்தில் மற்றுமொரு படைப்பாளியின் பயணம் என்பதும் ஒரு கலை தான். அலை, இலக்கியமாகும்.

பேராசிரியர் சி.ஜெயசங்கர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More