யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதிய குடியேற்றத் திட்டம், நாவற்குழியைச் சேர்ந்த அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது- 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி -பூநகரி வீதி வழியாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தவரின் மனைவி ஒரு துவிச்சக்கர வண்டியில் முன்னே செல்ல உயிரிழந்தவர் பிறிதொரு துவிச்சக்கர வண்டியில் 10 மாத குழந்தையை முன் கூடையிலிருந்து இருத்தி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டியை மோதி விபத்துக்குள்ளானது.
அதன் போது, துவிச்சக்கர வண்டியில் இருந்த குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளானது. அதேவேளை , துவிச்சக்கர வண்டியை ஓட்டி சென்றவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி துவிச்சக்கர வண்டி ஓட்டி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியை செலுத்திய நபர் மது போதையில் காணப்பட்டதாக விபத்து ஏற்பட்ட இடத்தில் நின்றவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சாவகச்சேரி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.