64
இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகிய ஐவர் கொண்ட குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
நாகபட்டினத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள நிலையில், அவருடன் இணைந்து ஆறு பேர் கொண்ட குழுவாக சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை இலங்கை மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம், இராமச்சந்திரன், அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கம், முல்லைத்தீவை சேர்ந்த மரிய ராசா, மன்னாரை சேர்ந்த ஆலம், மற்றும் சங்கர் , கிளிநொச்சியை சேர்ந்த, பிரான்சிஸ் மற்றும் அந்தோணி பிள்ளை, ஆகியயோர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love