Home இலங்கை ஆலய நெறிமுறைகளை மீறியதாக பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் மீது குற்றச்சாட்டு!

ஆலய நெறிமுறைகளை மீறியதாக பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் மீது குற்றச்சாட்டு!

by admin

 

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11.04.25) நடைப்பெற்றது. அதன் போது ஆலய வழிபாட்டிற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.

அதன் போது, பிரதமரின் பாதுகாப்புக்காக ஆலய சூழலில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சப்பாத்துகளுடன் ஆலய வளாகத்தினுள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை , ஆலயத்தினுள் பிரதமர் வழிப்பாட்டிற்காக சென்ற வேளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்கள் மேலங்கிகளுடன் ஆலயத்தினுள் பிரவேசித்தனர்.

பிரதமருடன் சென்றிருந்த கடற்தொழில் அமைச்சர் இரா சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் மேலங்கிகளை கழட்டி விட்டு சென்ற போதிலும் , பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பிரிவினரும் மேலங்கியுடன் சென்று இருந்தனர்.

பிரதமரின் வருகைக்காக அதிகாலை வேளை குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களை உடற்சோதனைக்கு உட்படுத்தி , கெடுபிடிகளை அதிகரித்தமையால் , பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கி இருந்தனர். அது தொடர்பில் ஆலய பிரதம குருக்களால் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12.04.25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்ட ம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரியர் கலந்து கொண்டார்.

அவர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிக பெரிய மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மாவிட்ட புரத்திற்கு சென்றது மிக மலிவான தேர்தல் பிரச்சாரத்திற்காகவே, மாவிட்டபுரத்திற்கு கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்று இருக்கின்றார்கள் அவர்கள் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை.

பிரதமரின் அதிரடி வருகையால் பக்தர்களின் வயிற் எரிச்சலை தான் பெற்று சென்றுள்ளனர். இந்த மலிவான அரசியலுக்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்

இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார் பிரதமர், தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக பிரதமர் என்ன சொல்ல போகிறார் ?

அதேபோன்று நேற்றைய தினம் காரைநகர் மற்றும் நீர்வேலி பகுதியில் ஆலய வளாகத்தில் மேடை அமைத்து , தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டு இருந்தார்.

இவ்வாறான மலிவான அரசியலை நாட்டின் பிரதமர் செய்ய கூடாது. இங்குள்ள எடுபிடி அரசியல்வாதிகள் , சின்ன பிள்ளை அரசியல் செய்பவர்களின் சொல்லை கேட்டு நடக்க கூடாது.

வடக்கை நோக்கி பல அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தலுக்காக படையெடுத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மத தலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மலிவான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More