நூறுகோடி மக்களின் எழுச்சி – 2025
நூறுகோடி மக்களின் எழுச்சியானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஒரு உலகந்தழுவிய பிரச்சாரமாக பெப்ரவரி 14ஆம் திகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் – வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது என்ற தொனிப்பொருளுடன் இவ் எழுச்சியானது கொண்டாடப்படுகின்றது. இது இலங்கையிலும் இன, மத, மொழி, வர்க்க, பால் வேறுபாடுகளின்றி, 2013ஆண்டு தொடக்கம் இன்றுவரை வெவ்வேறு மாவட்டங்களில் பல்வேறு கலையாக்கச் செயற்பாடுகளுக்கூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வருடம் இவ்வெழுச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டது. அதேவேளை, அநுராதபுரத்திலுள்ள கெக்கிராவயில் பின்பர பண்ணையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த பெண்களின் எழுச்சியாகவும், ஒன்றுகூடலாகவும் இடம்பெற்றது. இதனை சாவிஸ்திரி தேசிய பெண்கள் இயக்கம் (SAVISTHRI National Women’s Movement) மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த சமதை பெண்ணிலைவாத நண்பிகள் (SAMATHAI Feminist Friends) இணைப்பாக்கம் செய்திருந்தனர்.
இங்கு ஒன்றிணைந்த – வன்முறைகளற்ற சமூகங்களையும், நாட்டை யும், கனவுகாணும் பெண்களால், “அன்பையும் அகிம்சையையும் எங்கள் பண்பாடாக்குவோம், அன்பினாலான வாழ்தல் காண்போம்!” என்ற இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டு இரு மொழிபேசும் 80 பெண்களாலும் கையெழுத்திடப்பட்டது.
இங்கு இலங்கைமுழுவதும் பரவலகக் காணப்படும் செவ்வரத்தம் பூ அன்பின் குறியீடாக, வன்முறை வேண்டாம் என்பதை நினைவுறுத்துவதாக பெண்களால் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த அறிக்கையைத் தங்களது ஊடகத்தில் வெளியிடுவதன் மூலமும், வன்முறையற்ற வாழ்தலை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தத் தீவில் அன்பை நிறைக்க இணையுமாறு அழைக்கின்றோம்.
அறிக்கை கீழே UNICODE இல் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிக்கையின் பிரதி கையொப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது
சமதை பெண்நிலைவாத நண்பிகள் – மட்டக்களப்பு
……
எங்கள் நாட்டின் அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் பெண்களாகிய நாங்கள் எங்களுக்கும் முழுநாட்டுக்கும் வன்முறைகளற்ற வாழ்தலை உருவாக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
இலங்கையானது பல்தன்மை கொண்ட இயற்கைச் சூழல்களையும், மனிதர்களையும் கொண்ட அற்புதமான ஒரு தீவு.
அன்பையும், அகிம்சையையும் தங்கள் மதமாகக் கொண்டவர்கள் வாழும் நாடு. அன்பையும், அகிம்சையையும் போதித்த பல்மதங்களைப் பின்பற்றுவோர் வாழும் நாடு.
ஆனால், இந்த நம்பிக்கைகளுக்கு எதிரான அதிகாரமும், வன்முறைகளும் எங்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளன. எங்கள் வாழ்வின் எல்லாத்தளங்களிலும்; – குடும்பம், சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் வன்முறை ஒரு சாதாரண விடயமாக்கப்பட்டு வருகின்றது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அதிகாரத்தையும், வன்முறையையும் பயன்படுத்துவதுதான் தீர்வு என்றும் நம்ப வைக்கபட்டுள்ளோம்.
இலங்கைப் பெண்களாகிய நாங்கள் வன்முறைகளின் கொடூர வடிவங்களை அனுபவித்திருக்கின்றோம் – அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றோம். இங்கு வன்முறையாளர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல, இந்த நாட்டுக்குள்ளே எங்களில் ஒரு பெண்ணைத் தாயாகக் கொண்டு பிறந்து இந்த சமூகங்களால் வளர்த்து உருவாக்கப்பட்டவர்கள்.
எங்கள் பிள்ளைகள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதேநேரம் எங்கள் பிள்ளைகள் வன்முறையாளர்களாக இருப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டிய வாழ்தலை, வன்முறையால் கட்டியெழுப்புவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.
வன்முறைகளை விதைக்கும், வளர்க்கும் பண்பாட்டை நாங்கள் நிராகரிப்போம்!
வன்முறைகளை விதைக்கும் அரசியல்வாதிகளையும், மதத் தலைவர்களையும், வர்த்தக முதலாளிகளையும் இவர்கள் போன்ற அனைவரையும் நிராகரிப்போம்!
அன்பையும் அகிம்சையையும் எங்கள் பண்பாடாக்குவோம்!.
அன்பினாலான வாழ்தல் காண்போம்!
………….
செவ்வரத்தம்பூ
இலங்கை முழுதும் யுத்தம் நடந்த – நடக்காத இடங்களெங்கும் எல்லா இண்டு இடுக்குகளிலும் பூத்து நின்ற நிற்கும் பூ…
மொழி, மதம் கடந்து யுத்தம் தின்ற பிள்ளைகள் பலரும் நட்ட, தொட்டு விளையாடிய பூக்கள்,
யுத்ததாரிகளின் முகாம்களின் வேலிகளில் பூத்துக் கிடந்து யுத்தத்தின் கொடூரங்களுக்கு சாட்சியாக நின்ற பூ
யுத்தம் விதைத்த எல்லா வேதனைகளுக்கும் சாட்சியாக நின்ற பூ
போனவர்கள் திரும்புவார்களா என்ற ஏக்கத்துடன் காலையில் கதவு திறந்த தாய்மார் மனைவிமார்களுக்கும் உறவுகளுக்கும் பூத்துப் புன்னகைத்து நிற்கும் பூ,
அவர்களது நலனுக்காய் கடவுள்களின் கால்களில் சேர்ந்து நம்பிக்கை தந்த பூ
அன்பின் அடையாளமாக செவ்வரத்தம்பூ