Home இலங்கைஇடப்பெயர்வின் வலிகளை உணர்ந்தவன் நான்

இடப்பெயர்வின் வலிகளை உணர்ந்தவன் நான்

by admin

 

இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன் தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மயிலிட்டி மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா மயிலிட்டி சனசமூக நிலைய வீதியில் இன்றைய திண்ம திங்கட் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், கட்டடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.  அதன் பின்னர் இடம்பெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக நான் கடமையாற்றி யிருக்கின்றேன். 1996ஆம் ஆண்டு நாம் இங்கு வந்தபோது இடம்பெயராமல் தங்கியிருந்த தையிட்டி மக்கள் சிலரை இராணுவத்தினருடன் வந்து நான் பார்வையிட்டிருந்தேன்.  அப்போது மயிலிட்டி உள்ளிட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வீடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததை நான் நேரடியாகக் கண்டிருந்தேன். 2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக யாழ். மாவட்டத்துக்கு நான் வந்த பின்னர் மயிலிட்டிப் பகுதியை வந்து பார்வையிட்டபோது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது. நல்ல நிலையில் இருந்த வீடுகள் பலவும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக நான் வரும்போது மாவிட்டபுரம் சந்தி வரையிலேயே முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தன.  அதன் பின்னர் படிப்படியாக இங்கே மீள்குடியேற்றம் நடைபெற்றது. அன்றைய காலத்தில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா, தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர் மீள்குடியமர்வு செயற்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தார்கள். அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருந்தால் மேலும் பல காணிகளை எம்மால் விடுவித்திருக்க முடியும்.

காணிகளை விடுவிக்கும் போது மகேஸ் சேனநாயக்க  , நீங்கள் அடுத்த வாரமும் எங்களிடம் வருவீர்கள். அடுத்த காணிகளை விடுவிக்கக் கோருவீர்கள் என்று நகைச்சுவையாகச் சொல்வார். அப்படித்தான் இந்தக் காணி விடுவிப்புக்களைச் செய்தோம்.

மாவட்டச் செயலராக இருந்தபோது என்னுடன் மிகச் சிறந்த அணி இருந்தது. அப்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்டச் செயலர் – காணி – பணியாற்றிய முரளிதரன் மற்றும் இந்தப் பகுதி பிரதேச செயலர்களாக இருந்த சிறிமோகன், சிவசிறி ஆகியோரும் என்னுடன் இராணுவத்தினருடன் கலந்துரையாட வருவார்கள். அடிக்கடி இராணுவத்தினரைச் சந்தித்து காணி விடுவிப்புக்கான கோரிக்கையை முன்வைத்தே இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தோம்.

தற்போது இங்கு வரும்போது இந்தப் பகுதிகளைப் பார்வையிடும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடுகளை அமைத்து கட்டடங்களை அமைத்து முன்னேறியிருக்கின்றீர்கள். உங்கள் கிராமத்தை வளர்ச்சியடையச் செய்திருக்கின்றீர்கள்.

நிகழ்வின் தலைவர் தனது உரையில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். நான் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே இந்தப் பகுதிக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீபவாணந்தராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். விரைவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவோம் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.  மேலும், திருப்பூர் இளைஞர் நன்பணி ஒன்றிய கட்டடம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதியில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More