Home இலங்கைகாணிகள் சுவீகரிப்பு – வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை அழைத்தார் ஹரிணி!

காணிகள் சுவீகரிப்பு – வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை அழைத்தார் ஹரிணி!

by admin

 

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் சுவீகரிப்பு தொடர்பில், மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில், பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (23) அன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் (28.03.2025) திகதியிடப்பட்டு, 2,430 இலக்கமிடப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணை கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு  பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 23 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  முற்பகல் 11  மணி முதல் பிற்பகல் 1  மணிவரை பாராளுமன்றத்தில்  தனது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் (28.05.2025) திகதியிட்ட   வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக பிணக்குகள் எழுந்துள்ளன.

குறித்துக் கலந்துரையாடுவதற்காக 23 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை பாராளுமன்றத்தின்  குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்” என்று   பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரைக் குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது என சபை முதல்வரும் அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களைப் பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி  பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்கள் எம்முடன்
இருக்கிறார்கள்.இவ்வாறான நிலையில், நாங்கள் ஏன் வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் செயற்பட வேண்டும்,? இந்த வர்த்தமானி தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் பல விடயங்களை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரைக் குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. காணி பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு 9 மாகாணங்களையும் வரையறுத்து இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் பிரத்தியேகமாகப் பிரசுரிக்கப்படவில்லை.

காணி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு ஒன்றிணைந்து கூட்டுப் பத்திரத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது  எனக்  கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More