குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு
வாவிகள் கடந்து வயல்வெளி திரிந்து
வீதிகள் வளவுகள் எல்லாமும் நிறைத்து
முற்றங்கள் மகிழ வாசல்கள் கடந்து
வீடுகள் எல்லாமும் நிறைந்திடும் மகிழ்வு
தொன்மைத் தமிழரின் தொல்லிசை மொழியாம்
சொர்ணாளி ரீங்காரம் செவிகளில் நிறைக்க
கூடி முழங்கிடும் குதித்தாட வைத்திடும்
ஆதித்தமிழ் லயம் பறையொலி முழக்கம்
எங்கும் நிறைந்திட எதிலும் உறைந்திட
எமதென எமதெனக் கிளர்ந்திடும் மனிதர்
காவியம் படித்தலில் உடுக்கொலி சிலிர்ப்பினில்
அம்மானை சிலம்பின் மணியொலிப் பரவலில்
குலவைகள் போட்டு குதித்து ஆடிடும்
மனிதர்கள் மனத்தை ஆற்றிடும் சடங்கு
குவலயம் மீதினில் மனிதர்கள் வாழ்வை
கொண்டாட்டமாக்கிய முன்னோர்கள் வாழ்க
சி.ஜெயசங்கர்,
09.06.2025