பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர்.
ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலைமுறையினராகவே தற்போதைய சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு காலத்தில் இருந்து கொண்டு நான் பயணம் செய்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் மீண்டும் வராதா அந்த அழகிய நாட்கள் என உள்ளம் ஏங்குகின்றது.
ஆவணி மாதம் பிறந்ததும் எப்போது முதல் மழை பெய்யும், எப்போது வீட்டிலிருந்து சேனைப் பயிற்ச்செய்கைக்காக அம்மாவும் அப்பாவும் போவார்கள் என்ற காத்திருப்பு, அவர்கள் போகும்போது பாடசாலை விடுமுறை நாட்களில் அவர்களுடன் நானும் சேனைக்காட்டிற்கு செல்வதும் ஓடி ஆடி விளையாடுவதும் என்ற அழகிய நினைவுகள். எப்போது பாடசாலை விடும் என்று காத்திருந்து பாடசாலை விட்டதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பிள்ளையும் என்னோடு இணைத்துக்கொண்டு பின் கரியலில் மூன்று குட்டி பிள்ளைகளையும் ஏற்றி எடுத்து போற பாதையில் உள்ள சின்னக்கடையில் பக்கெட் ஐஸ்பழம், குச்சிமிட்டாய் எல்லாம் வாங்கி சைக்கிள் கூடைக்குள் போட்டு பாதை நீட்டுக்கும் சாப்பிட்டு விளையாடிக் கொண்டு பல கதைகள் பேசிய படி காட்டுப்பாதை வழியாக சேனைக்காடு சென்ற காலம்.
போற பாதையில் நாவல், இளந்தை, கூழா, விழாத்தி, கிலா, சூரை போன்ற மரங்களில் பழங்களைக் கண்டால் மரத்தில் ஏறி பழம் பறித்த காலம்.
அது மட்டுமா போற பாதையில் உள்ள குளக்கட்டுக்களுக்கு போகாமல் போன சரித்திரமே இல்லை. குளக்கட்டில் எல்லாரும் கொஞ்ச நேரம் இருந்து அங்கு உள்ள நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்ற பல பறவைகளையும் அங்கு காணப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் பார்த்து ரசித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த காலம்.
செல்லும் வீதி ஏற்றம் இறக்கம் கூடிய வீதியாகும். அந்த ஏற்றத்தால் மூச்சுப்பிடிக்க மிதித்து சைக்கிளை கஷ்டப்பட்டு ஏற்றிய பின் அப்பாடா இறக்கம், இறக்கத்தில் சத்தமிட்டு கூச்சல் போட்டுக்கொண்டு பறவையாய் பறந்து சென்ற காலம்.
அந்த மரத்துல பேய் இருக்காம் இந்த பற்றை குள்ள பேய் இருக்காம் என்று பயந்து பயந்து சென்று புளியங்காய் பறித்து உண்டு பயணத்தை தொடர்ந்த காலம்.
இப்படியாக ஒரு மாதிரி 30 நிமிட சைக்கிள் ஓட்டத்தை 1:30 மணி நேர ஓட்டமாக நீடித்து சேனைக்காட்டை வந்து அடைந்ததும், காரல் கீரை சொதி, கானந்தி கீரை சொதி, ஆரல் கீரை சொதி, குமிட்டி கீரை கடையல், திராய்கீரை சுண்டல் என்பவற்றில் கட்டாயமாக ஒரு கீரை கறியாவது அம்மா சமைத்து வைத்திருக்க அதை சோறுடன் வைத்து அதோடு மீன் பொறியலும் வைத்து உண்ட பின்னர், சேனைக்காட்டு வெட்டையில் ஏதாவது விளையாடி களைப்பாறிய பின் குளத்துக் கரை நோக்கி அனைவரும் சென்று அங்கு மண்வெட்டியால் மண்புழுவை வெட்டி எடுத்து தூண்டிலில் குத்தி குளத்துக்கரை நீரோடை ,ஆரைப்பற்றை நீரில் மீன் பிடித்து விளையாடிய காலம்.
வயல் வெட்டையில் குட்டிக் குளம் கட்டி மீன் குஞ்சுகளை ஓடையில் இருந்து பிடித்து வந்து கட்டிய குளத்தினுள் இட்டு விளையாடிய காலம்.
காய்ந்த மாட்டு சாணிகளைத் தூக்கி ஆட்காட்டியின் முட்டைகளை தேடி திரிந்து அழைந்து திரிந்த காலம்.
இப்படியாக பின்னேரம் ஐந்து மணி ஆகிவிடும். எப்படியாவது காட்டுப்பாதையில் யானை வருவதற்கு முன்னர் அப்பாவின் காவலில் அவசர அவசரமாக வீடு திரும்பிய காலம்.
இவ்வாறாக பாடசாலை முடிந்த பின்னும், சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாடிய என் நினைவுகள் கண்களில் கண்ணீரை சிந்த வைக்கின்றது.
அதுமட்டுமா வேளாண்மை விதைப்புக்கு முதல் உழவு செய்யும்போது வயளோடு வயலாக நானும் விளையாடிய நாட்கள், வயல் விதைப்பன்று குடும்பம் குடும்பமாக வந்து சமைத்து வயல் விதைப்பில் ஈடுபட்டவர்களுடன் உணவருந்தி அவர்களின் பழங்கால கதைகளை கேட்டு சிரித்த காலம்.
இவ்வாறாக வயல் விதைப்பு முடிந்ததும் குருவிக்காவல், ஆகா என்ன ஒரு சந்தோசம் கிழிந்த தகரத் துண்டு ஒன்றை எடுத்து வயல் வரம்பில் காணப்படும் சிறிய ஆத்தி மரத்தை வளைத்து அதில் இருக்கை கட்டி அமர்ந்து அதில் தகரத் துண்டை கட்டி தடியால் அடித்து காய் கூய் என குருவி, புறா துறத்திய காலம்.
இடையிடையே விளாத்தியடி பிள்ளையாரடிக்கு சென்று விளாங்காய் ஆய்ந்து சாப்பிட்ட நினைவுகள், பின்னர் வாகைத் தண்டுகளை முறித்து அதை படுக்கை போல் பரவி அதன் மேல் குளத்துக் காற்றில் எண்ணையே மறந்து நித்திரை செய்த காலம்.
ஆரைப் பற்றை மணலை எடுத்து வந்து பரவி ஆரைப் பற்றையில் பிள்ளையார் போன்ற கல்லை எடுத்து வந்து சாமி வைத்து விளையாடிய காலம்.
இவ்வாறாக ஆரைப்பற்றை நீரில் குதித்து குதூகலமாக விளையாடி பின்னர் மழை பெய்ததும் அதில் நனைந்து விளையாடிய காலம்.
கச்சான் அறுவடை, சோளன் அறுவடை என்றால் அது இதைவிட விஷேசம் வீடுகளில் இருந்து சின்ன மிஷின், மாட்டு வண்டி என்பவற்றில் அனைவரும் குடும்பமாக வந்து, கச்சான் என்றால் அனைவரும் வட்டமாக இருந்து பல கதைகளையும் கதைத்துக் கொண்டு கச்சான் ஆய்வார்கள், ஒரு கொத்து ஆய்ந்தால் பத்து ரூபாய் என்ன ஒரு சந்தோசம் ஒரு கொத்து கச்சான் ஆய்ந்து அப்பாவிடமே பத்து ரூபாய் வாங்கும் போது. பின் பெரிய பானை ஒன்று வைத்து கச்சான் அவிய விட கச்சான் அவிய முதலில் ஒவ்வொரு கட்டம் கட்டமாக ருசி பார்க்கும் அனுபவம் இருக்கே மறக்கவே முடியாது. பானை சூடே ஏறி இருக்காது அதுக்கு முதலே எடுத்து சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சண்டை. இவ்வாறாக சோளன் சேனைக்குள் கிளி, குரங்கு வராமல் காவல் பார்த்துக் கொண்டே சோளன் கதிரை முறித்து அடுப்பில் சுட்டு சாப்பிட்டு மகிழ்ந்த காலம்.
மழை அதிகமாக பெய்து வெள்ளம் . இந்நேரம் என்னோட குட்டி நண்பர்களை கூட்டிக்கொண்டு குளம் வான் போறது பார்க்க போன நினைவு. அது என்ன ஒரு அழகிய காட்சி.
இப்படியாக நான் நடந்து வந்த பாதையை கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போதைய சிறுவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நீ வந்த பாதையை திரும்பிப் பார்த்து கூறு என்றால். நான் அந்த இடத்தில் மேலதிக வகுப்பிற்குச் சென்றேன் இங்கு மேலதிக வகுப்புக்குச் சென்றேன் என்ற ஒரு கவலையான ஒரு பதிலையே கூறுவார்கள்.
ஆனால் எனது பாதை ஒரு சிட்டுக்குருவி எப்படி ஒரு சுதந்திரமான பாதையில் பறந்து வந்து உயர பறந்ததோ. அதேபோன்று நானும் அழகான நினைவுகள் பலவற்றை கூறக்கூடிய நீண்ட பாதையால் பறந்து வந்து பல்கலைக்கழகத்தை அடைந்துள்ளேன். இப்போது எண்ணுகின்றேன் அந்த அழகிய காலம் மீண்டும் வருமா என்று. ஆம் கட்டாயம். என்னை எப்படி சுதந்திரமாக எனது தாய் தந்தையர் வளர்த்தார்களோ அதே போன்று எனது குழந்தையையும் நான் பல அழகிய கதைகள் கூறக்கூடிய பாதையால் சுதந்திரமாகப் பறந்து வரச் செய்வேன்.
நாகராசா லக்சிகா
கிழக்கு பல்கலைக்கழகம்

