வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா இன்று (02) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாகவும் பக்திப்பூர்வமாகவும் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெயமான்ன ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஆகியோர் இணைந்து இந்த திருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இவர்களுடன் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோரும் கூட்டுத்திருப்பலியில் பங்கெடுத்தனர்.
திருவிழா கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து, மருதமடு அன்னையின் மகிமை பொருந்திய திருச்சொரூப பவனி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தல முன்றலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருச்சொரூப ஆசி பக்திப்பூர்வமாக வழங்கப்பட்டது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இனம், மத பேதமின்றி வருகை தந்த லட்சக்கணக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் கத்தோலிக்க மக்கள் இந்த பெருவிழாவில் கலந்துகொண்டனர். மேலும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்களத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் இந்த வழிபாடுகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் மடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் நவநாள் வழிபாடுகளும், திருச்செபமாலை ஆராதனைகளும் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெற்றன. நேற்று (01) புதன்கிழமை மாலை திருவிழா வேஸ்பர் (மாலை) ஆராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை பிரதான திருவிழா திருப்பலி சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

#Mannar #MadhuChurch #Festival2026 #SriLankaNews #MadhuMatha

