வடமாகாண சபையின் இறுதி அமர்வு இன்று புதன் கிழமை (23.10.18) இடம் பெற்றுள்ள நிலையில் மாகாண சபையின் ஆயுட் காலம் நாளை வியாழக்கிழமை (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வடமாகாண சபையின் முன்னாள், இன்னாள் சுகாதார அமைச்சர்கள் உட்பட 6 உறுப்பினர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் நாளை வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
எனினும் வடமாகாண சபை உறுப்பினர்கள் 38 பேருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 37 உறுப்பினர்களுக்கு குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதும், அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த பா.சத்தியலிங்கம் குறித்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள தகுதி அற்ற நிலையில் அவருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.
இதேவேளை மாகாண சபை உறுப்பினராக காணப்பட்ட ஜீ.குணசீலனுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதும், குறித்த பத்திரத்தை பெற்றுக்கொள்ள சிறிது காலம் தேவை என்பதற்காக வட மாகாண சபையின் அவைத்தலைர் சி.வி.கே.சிவஞானத்தினால் மீளவும் திருப்பி பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும் முன்னாள் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான பா.சத்தியலிங்கம் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
ஆனால் இது வரை குறித்த தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்க வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி .கே. சிவஞனாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது..
மேலும் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக கடந்த 1 வருடங்களுக்குள் பொறுப் பேற்றுக் கொண்ட மேலும் 4 உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.