சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய தூதரகத்துக்குள் வைத்து அவர் கொல்லப்பட்டு விட்டார் என குற்றச்சாட்டப்பட்ட நிலையில் முதலில் இதனை மறுத்த சவூதி , பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட வேண்டும் என்ற ஆணையை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்கைப் மூலம் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை துருக்கி பாராளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றிய ஜனாதிபதி எர்டோகன் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சுமத்தியுள்ளார்.