குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுவோம் என்று தெரிவித்த கருணா, நாட்டின் அபவிருத்திகளை முன்னெடுக்கும் செயல் வீரர்கள் தாம் என எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களுடன் கிழக்கில் உள்ள முஸ்லீம் ஏகாதிபத்திய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் கருணா கூறியுள்ளார். இந்த நிலைமை ஏற்பட கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.
இதனால் கிழக்கில் பல நிலங்கள் பறிபோகின்றது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு முதலியவையும் தீரக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாணக்கியமான தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மதிப்பிற்குரிய சாணக்கியமான தலைவர் சம்பந்தனை கேட்டுக் கொள்ளதாகவும் கருணா கூறினார்.