அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவேன் என யாராவது பேசினால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது என மத்திய அமைச்சர் உமா பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே இந்துக்கள்தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தவர்கள். ஆனால், அதற்காக அயோத்தியிலுள்ள ராமர் கோயில் வளாகத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன் என் யாராவது கூறினால் அவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடிக்கல் நாட்ட வேண்டும். அப்போதுதான் அவரது கட்சி செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட முடியும்.
வத்திகான் ; நகரில் ஒரு மசூதி கட்டுவதையோ அல்லது மதினாவில் ஒரு கோயில் கட்டுவதையோ பற்றி பேச முடியுமா? அது போலதான் அயோத்தியில் ஒரு மசூதி கட்டுவதைப் பற்றி பேசுவதும் நியாயமற்றது ஆகும். அயோத்தியாவில் பிரச்சினையானது நிலம் சம்பந்தப்பட்டது ஆகும். நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. அயோத்தியில்தான் கடவுள் ராமர் பிறந்தார் என்பது இறுதியாக முடிவான விஷயம்.
இப்பிரச்சினைக்கு நீதிமன்றத்திற்கு வெளியேதான் தீர்வு காண முடியும். எனவே ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா ஆகியோர் இணைந்து இதற்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1990களில் ஆர்எஸ்எஸ் – பாஜக தொடங்கிய ராமர் கோயில் கட்டும் ராமஜென்ம பூமி இயக்கத்தில் உமா பாரதி தீவிரமாகப் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.