ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகியுள்ளார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் பதவி விலகியுள்ளார் என தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் – செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தையின் போது ஹசன் அலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாகவும் , ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினை வழங்குவதாகவும் ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனவும்இதனடிப்படையிலேயே சல்மான் பதவி விலகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட கூட்டம்
Dec 14, 2016 @ 06:21
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.. கட்சி ஒன்றில் பொதுசெயலாளர் ஒருவரும், செயலாளர் ஒருவருமாக இரண்டு பேர் இருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
ஒரு செயலாளரை அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய முஸ்லிம் காங்கிரஸுக்கு அண்மையில் உத்தியோகபூர்மாக அறிவித்து காலக்கெடு ஒன்றையும் விதித்திருந்தார்.
இதன்படி நாளையதினம் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸினால் அறிவிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தின் போது பொது செயலாளர் அல்லது செயலாளர் குறித்து தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.