பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது எனவும் அது ஒரு துக்லக் ஆட்சியின் வெளிப்பாடு எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணமதிப்பிழப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு தடுப்பு என்று காரணம் கூறப்பட்ட இந்த நடவடிக்கையால், பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது