புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தலைவர் சம்பந்தன் வெளியிட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்னும் சகல தரப்புகளிலிருந்தும் பல்வேறுபட்ட கட்சிகளிடமிருந்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களின் அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு ஒரு தீர்வை முன்வைக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். முப்பது வருடங்களுக்கு மேலாக தனிநாட்டிற்காகப் போராடி வந்த தமிழ்த் தேசிய இனம், அதனை கைவிட்டு வடக்கு-கிழக்கு இணைந்த தமிழரின் தாயகத்தில் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு ஊடாக, அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை ஏற்றுக்கொண்டு, அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக அதிகப்படியான ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். இப்பொழுது அரசியல் சாசனம் தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே;.வி.பி போன்றவை வடக்கு-கிழக்கு இணைக்கப்பட முடியாதது என்றும், ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்க முடியாதென்றும் பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் இவற்றை மாற்ற அனுமதிக்க முடியாதென்றும் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியிருப்பது மாத்திரமல்ல அவ்வாறான ஒரு அரசியல் சாசனம் நோக்கியே சிங்கள மக்களும் தயார் படுத்தப்படுகின்றார்கள்.
அதாவது, இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள பௌத்த மக்கள் எதை விரும்புகிறார்களோ அதன் அடிப்படையில்தான் தீர்வுகள் இருக்க முடியும் என்பதை ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி, ஹெலஉருமய போன்ற சகல சிங்கள பெரும்பான்மைவாத கட்சிகளும் கூறிவருகின்றன. இங்கு சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்பதும் அதற்கமைவாகவே தமிழ் மக்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதுடன் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம்,, சிங்கள பெரும்பான்மைவாதம் மற்றும் சிங்கள வெற்றிவாதத்திற்குட்பட்டதாகவே புதிய அரசியல் சாசனம் இருக்க வேண்டும் என்பதில் சிங்கள தலைமைகள் அனைத்தும் ஒரே கண்ணோட்டத்தில் ஒரே கருத்தில் இருக்கின்றன.
கடந்த வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பிற்குப் பின்னர், சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்ததாகவும் அந்த சந்திப்பில் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாதென சம்பந்தன் வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவர் மேலும், புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்குமென தாம் பிரதம மந்திரிக்கு உறுதிபடத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இப்பொழுது எழுந்துள்ள கேள்வி என்பது யார் குழம்பியிருக்கிறார்கள் யார் குழப்புகிறார்கள் என்பதுதான். சுமந்திரனின் ஊடக அறிக்கை என்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபுறம் ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம் என்று கூறுகிறார். மறுபுறத்தில் ஒற்றையாட்சியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என்று கூறுகிறார். பிரதமரிடம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிய திரு. சம்பந்தன் அவர்கள், சம்பூரில் நடைபெற்ற வீதித் திறப்பு விழாவின்போது, அரசின் கொள்கையால் நல்லிணக்கம் ஏற்படுகின்றது என்றும் குழப்பங்களை ஏற்படுத்த யாரும் முயலக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமது மொழி, இனம், அடையாளம், தாயகம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக மாறிமாறி வந்த அரசாங்கங்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தி, அவைகள் எல்லாம் தோல்வியுற்ற நிலையில்தான், தந்தை செல்வா அவர்கள் தமிழ் மக்களுக்கான ஒரே மாற்றுவழி தனிநாடுதான் என்பதை வட்டுக்கோட்டை பிரகடனத்தின் ஊடாக வலியுறுத்தியிருந்தார். இன்று நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர், மீண்டும் ஒரே நாட்டிற்குள் தீர்வு என்று நாங்கள் கூறுகின்ற பொழுது, சிங்கள பெரும்பான்மை தான் விரும்பிய அர்ப்பத்தனமான சலுகைகள் என்பதல்ல. மாறாக, தமிழ் மக்கள் இந்த மண்ணின் ஆதிக்குடிகள் என்ற வகையிலும் சிங்கள மக்களுக்கு சமமாகவோ அல்லது அதற்கு முன்னரே இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையிலும் அண்மைக்கால ஐ.நா. சபையின் சாசனங்களுக்கு இணங்க ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையிலும்; தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அதிகாரங்களை சமமாகப் பங்கிட்டுக்கொள்வது எவ்வாறு என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளும் அரசியல் சாசன வடிவமைப்புக்களும் அமைய வேண்டும். இதன் மூலம்தான் கௌரவமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு தீர்வினை அடையலாமே தவிர, பெரும்பான்மைவாத அடிப்படையில் அளிக்கப்படும் அர்ப்பத்தனமான சலுகைகள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்கிறோம்.
இதற்கு முன்பாக பல கருமங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாதென்றும் மக்களை அமைதியாக இருக்கும்படியும் கூறியவர்கள் இன்று ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதற்கான அவசியம் என்ன?
1977ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து மிகப் பாரிய வெற்றியைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றம் சென்றதும் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அரசாங்கம் முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக்கொண்டது. அதனைப் போலவே, 2015ஆம் ஆண்டு வட-கிழக்கு இணைப்பு, சமஷ்டி அமைப்புமுறை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்நிறுத்தி பாராளுமன்றம் சென்றவர்கள் இவை அனைத்தையும் கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களா என்பதை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒருபுறம் ஒற்றையாட்சி பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று கூறிக்கொண்டு மறுபுறம் அதே ஒற்றையாட்சியின்கீழ் அதிகாரப்பரவலாக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டைக் ளூகூட்டமைப்புத் தலைமை கொண்டுள்ளதா என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
வரவிருக்கும் அரசியல் சாசனம் என்பது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்புக்குச் சென்று அதில் பெரும்பான்மையின் ஆதரவையும் அது பெற்றிருக்க வேண்டும் என்பதையும் சம்பந்தன் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார். அவ்வாறாயின் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற ஒற்றையாட்சியின்கீழ் சிங்கள பௌத்த மேலாதிக்கம் விரும்பிய அரசியல் சாசனம் ஒன்றிற்கு தமிழ் மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்பதை அவர் கோருகின்றாரா என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
சுரேஷ். க. பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி