குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப காவல்துறைப் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவருக்கு உப காவல்துறை பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதியின் காரில் பயணித்த மற்றொரு காவல்துறை உத்தியோகத்தர் மீது சூடு நடத்தப்பட்டது. அவர் படுகாயமடைந்தார்..
இந்தச் சம்பவம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய தெற்கு வீதிப் பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் என்பவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் கட்டளை வழங்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் தொடர்ச்சியாக 16 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார்.’சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 லட்சம் ரூபா பெறுமதியையுடை தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும்.
சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகிறது’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளை வழங்கினார்.