மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக மாற்றப்படுவதற்கான புதிய சட்ட முன்வரைவு பாரா ளுமன்றத்தின் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என டெல்லி அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக நேற்றையதினம் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாராளுமன்ற அலுவலகத்தின் சிரேஸ் அதிகாரி ஒருவர் 2016 ஜீலையில், உயர் நீதிமன்ற பெயர்கள் மாற்றம் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சட்ட முன்வரைவின்படி கொல்கத்தா,சென்னை மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்,
இதில் தமிழக அரசு, சட்ட முன்வரைவில் முன்மொழியப்பட்ட மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரானது தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதே போல கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெயரானது கொல்கத்தா உயர் நீதிமன்றம் என்று மாற்றப்பட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு கேட்டு கொண்டது. எனினும் அம்மாநில உயர் நீதிமன்றமே பெயர் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தொடர்பாக, சட்ட அமைச்சர் பிபி.சௌத்ரி 2016இல் பாராளுமன்றில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அந்த சட்ட முன்வரைவு திருத்தப்பட்டு புதிய சட்ட முன்வரைவாக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி பெயர் மாற்றத்திற்கான புதிய சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதி்ர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.