மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று (23.11.18) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த விசாரனைக்கான கட்டளை எதிர் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
B/778-2013 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் இந்த வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வந்தன. இதன் போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அந்த மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக, எந்த நாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடுனர் தரப்பிலும்,காணாமல் போனவர்களின் உறவினர்கள் தரப்பிலுமான விவாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி கட்டளையை வழங்க இருந்தார். ஆனால் இன்றைய தினம் கட்டளை வழங்கப்படவில்லை.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா இன்றைய தினம் விடுமுறையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இன்றைய தினம் பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான கட்டளை ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணையிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரனைக்காக மன்றில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி நவாவி பிரசன்னமாகி இருந்ததோடு,குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.