எர் செல் மக்சிஸ் வழக்கு தொடர்பாக தன் மீது சி.பி.ஐ. தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என டெல்லி நீதிமன்றில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா முதலீடு செய்த போது ப சிதம்பரம் , விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அனுமதி அளித்து விட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமுலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ப.சிதம்பரம் பிணை மனுவின் மீது சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் அவர் மீது சரமாரியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது வழங்கவில்லை எனவும் எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே சி.பி.ஐ. கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை. இந்த வழக்கில் தன்னை காவலில் வைத்து விசாரிக்க தேவை இல்லை. எல்லாமே ஆவண ரீதியிலான ஆதாரங்கள்தான் என ப. சிதம்பரம் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது