206
டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள் ஆற்றவர்களை, கைகள் அற்றவர்களை காண இயலும். அதைத் தவிர இன்னும் பறிக்கப்பட்ட அங்கங்கள் தெரியாதவர்கள் பலர்.
எங்கள் காலத்தின் மாபெரும் துயரம். இரண்டு கால்களும் இழந்த குழந்தைகளும் இரண்டு கைகளையும் இழந்த குழந்தைகளையும் தெருக்களில் காண நேர்வதுதான். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் அந்த மாணவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லை. ஒற்றை கைகளால் வீசி விளையாடியபடி காலை இழுத்துக் கொண்டு அவன் நடப்பதை பார்க்க மனம் பதறியது.
அவன் உயர்தர வகுப்பில் படிக்கிறான். கால்களும் கைகளும் அற்ற குழந்தைகளின் கதி? அந்தக் குழந்தைகள் வளர்ந்த பின்னர் அம்மா! எனது கால் எங்கே? எனது கை எங்கே என்று கேட்கும்போது அந்தக் குழந்தைக்கு என்ன பதிலை கூறுவது? வன்னிப் பெருநிலப்பரப்பில் இரண்டு கால்களும் இல்லாத மனிதர்கள் பலரை காண நேரிடுகிறது. அவர்களின் கதைகள் துயர் நிறைந்தவை.
கோணாவில் பாடசாலையில் கண்களை இழந்த மாணவி ஒருத்தியின் பார்வை இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. அக்கராயன் பாடசாலை மாணவி ஒருத்தி விழுப்புண் அடைந்த கால் அழுகிக் கொண்டிருக்க அந்தக் காலை அகற்ற மனதின்றி வைத்திருந்தாள். இரண்டு கால்களும் இல்லாத இரு தங்கராசாக்களை எள்ளுக்காட்டிலும் முரசுமோட்டையிலும் வாழ்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஈழ மண்ணில் இந்த கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு யாரிடம் பதிலை கேட்பது?
யுத்தத்தை முடித்து விட்டோம் என்கிறது இலங்கை அரசு. ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டது என்று கூறுகிறது. எங்கள் உரிமைக்காக போராடினோம். இன்று கைகளும் கால்களும் கண்களும் இழந்து முடமாகிய மனிதர்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஒன்றில் அழிக்கப்பட்டோம். அல்லது அவயங்களை இழக்க வைக்கப்பட்டடோம்.
இலங்கை அரசாங்கம் தான் அழித்த அழிவுகளை மறைத்துக் கொண்டே இருக்கிறது. தமிழ் இனத்தை அழிக்கவும் ஊனப்படுத்தவும் மேற்கொண்ட யுத்தத்திற்கு வேறு ஒரு பெயர் வைத்து புனிதம் பூச முயல்கின்றது. தான் நடத்திய இனப்படுகொலை யுத்தம், போர்க்குற்ற யுத்தம் என்பதை மறைக்க எல்லாவற்றுக்கும் வெள்ளை அடிக்கிறது. உடைந்த கட்டிங்களுக்கு சீமெந்து பூசி வெள்ளை அடிக்கிறார்கள்.
போரால் நிர்மூலமான இடத்தில் புதிய கட்டிடம் அமைக்கிறார்கள். ஆனால் மாபெரும் அழிப்பு யுத்தத்தின் வடுக்களாயும் சாட்சிகளாயும் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளிலிருந்து நாம் காணும் இடமெல்லாம் அவயங்களை இழந்தவர்கள். இந்த அழிவை மறைக்க முடியாது. இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது.
ஆனால் அவயங்களை இழந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியும். குழந்தைகளின் எதிர்காலம் முதல் பல குழந்தைகளை உடைய தந்தைகளின் நிகழ்காலம்வரை போராட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. தன்னம்பிக்கையினால் தங்கள் வாழ்க்கை கொண்டு செல்பவர்களின் முயற்சிகளுக்கு ஊன்றுகோல் தேவை.
குளோபல் தமிழ்விசேட செய்தியாளர்
Spread the love