வவுனியா நகரசபையின் மக்கள் நலத் திட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வவுனியா நகரசபையின் பல்துறை சேவையாளர் விருது வழங்கும் விழா
இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு கட்சி சார்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்து எனது உருவப் பொம்மையை எரிப்பதற்கு ஆயத்தம் செய்வதாகச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்தக் கட்சியைச் சார்ந்தோர் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்து விடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா நகரசபையின் தலைவர் அவர்களும் அவருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த உறுப்பினர்களுஞ் சேர்ந்து முன்னெடுக்கின்ற இந்த நல்ல நிகழ்வு போற்றப்பட வேண்டியதொன்று. பிரதேச சபைகள், நகர சபைகள் ஒவ்வொன்றும் தத்தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடிய கலை, கலாச்சார, இலக்கிய, சமூக அபிவிருத்திப் பணிகள், பொருளாதார வேலைத்திட்டங்கள் மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த மக்களின் நன்மை நாடி அவற்றை முன்னெடுத்துச் செல்வது சிறப்பாகும். மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகளை அடையாளப்படுத்தி அவற்றை உறுப்பினர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவதற்காக அவற்றின் மேல் கூடுதல் அக்கறை கொண்டிருத்தல் அவசியமாகும்.
தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவதும் மேடைகளில் முழக்கங்களை மேற்கொள்வதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும் தேர்தல் முடிந்த கையோடு அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுத் தம்மை வளப்படுத்திக் கொள்கின்ற நடவடிக்கைகளிலேயே எமது அரசியல் தலைவர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்கள் பற்றிய சிந்தனைகள், மக்களின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடு மக்கள் பிரதிநிதிகளாகிய எமது மனங்களில் இருந்திருக்குமாயின் எமது மக்களின் வாழ்வு என்றோ மேம்பட்டிருக்கும். நாம் பதவிக்கு வந்ததும் எவற்றைப் பற்றி சிந்திக்;கின்றோம்? வழக்கமாக பிரதிநிதிகள் எமக்கான வசதிகளை மேம்படுத்தவே சிந்திக்கின்றோம். எமக்கு வசதிகள் தேவைதான். உதவிகள் தேவைதான். செலவுப் படிகள் தேவைதான். சலுகைகள் தேவைதான். ஆனால் அவை யாவும் மக்கள் நன்மைக்காகவும் மக்கள் சேவைக்காகவும் பாவிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்;. மக்களுக்கென வழங்கப்படும் பணங்களில் மக்கள் சேவைக்கென வழங்கப்படும் உதவிகளில் கைவைத்தல் மக்களுக்குச் செய்யும் துரோகமான செயலாகும்.
நாம் கட்சிகளையும் எம்மையும் மேம்படுத்தப்போய் மக்களை மறந்து போகின்றோம். மக்கள் நலனுக்கென்றே கட்சிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று மக்கள் நலத்தை விட்டு கட்சி நலன்களிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றோம். சுயநலங்களிலேயே சிந்தனையைப் பதியவைத்து வருகின்றோம்.
இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக, செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ் மொழியை தமது தாய் மொழியாகப் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற, வந்துள்ள பல் துறை சேவையாளர்கள் பலர் எம்மிடையே காணப்படுகின்றார்கள். ஆனால் அவர்களில் கூடுதலானவர்கள் இலை மறை காயாக மக்களுடன் மக்களாக வாழ்ந்து தம்மை இனங்காட்டிக் கொள்ளாதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் சிறப்புக்களை ஏனைய மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அவர்களின் ஆக்கங்களை இலக்கியப் படைப்புக்களை, கவிதை நயங்களை, ஓவிய அலங்காரங்களை, இசைப்பணிகளை, பொதுமக்கள் சேவைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கும் அவற்றைப் படித்துப் பயன் பெறுவதற்கும் இவ்வாறான முன்னெடுப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. இங்கு போட்டி பொறாமைகளுக்கு இடம்கொடுத்தல் ஆகாது. எங்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கவில்லையே என்பதற்காக பாராட்டுக் கிடைத்தவர்களை இகழ்வதும் இறுமாப்புடன் அவர்களை வைவதும் எம்மை மிகக் கேவலமானவர்களாகவே சமூகத்தில் அடையாளப்படுத்தச் செய்வன. இன்னொருவரை உயர்த்திப் பேசுவதால் உங்கள் உயர்ச்சி கேவலப்படுத்தப்படும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் நற் கீர்த்தி மேலும் உயருமே ஒளிய குறையாது.
மிகப் பழைய காலங்களில் புலவர்களின் புலமைத்துவத்தை மெருகூட்டுவதற்கும் அவர்களின் படைப்புக்களை விருத்தி செய்வதற்கும் அக்கால அரசர்கள் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். ஆனால் இன்றைய நிலையில் இலக்கிய வாதிகள் மற்றும் படைப்பாளிகள் தமது படைப்புக்களை நூல் வடிவில் வெளியீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு நூல்களை வெளியிடக்கூடிய மூலதனங்கள் அற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்ந்து இருந்து வருவது கவலைக்குரியது. அவர்களின் இறுதிக்காலங்கள் விரக்தி உற்ற நிலைக்குச் செல்ல சமூகத்தில் உள்ள நாங்கள் இடமளிக்கக் கூடாது. இன்றைய நிலையில் சங்கீத விற்பன்னர்கள் மற்றும் நடன விற்பன்னர்கள் சமூகத்தில் உச்ச நிலை அந்தஸ்தைப் பெற்று வாழ்வது மகிழ்ச்சி தருகின்றது.
ஆனால் என்னுடைய இளமைக்காலத்தில், வெள்ளையர் எம்மை ஆண்ட காலத்தில் அல்லது சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் எமது கலை, கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் ஆகியன பரிகாசத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பல்லாயிர வருட பண்பாடுகள் பகடியாகப் பேசப்பட்டு வந்தன. எப்பொழுது சிங்கள அரசியல்த் தலைவர்கள் ‘பஞ்சமா சக்திகள்’ என்று மதப் பெரியார்களையும், கிராமப்புற ஆசிரியர்களையும், உள்நாட்டு வைத்தியர்களையும், விவசாயிகள் மற்றும் மீனவர்களையும், தொழிற்சங்க உறுப்பினர்களையும் அடையாளப்படுத்தத் தொடங்கினார்களோ அப்பொழுதே சிங்கள மக்களின் பாரம்பரியங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. ஆனால் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் ஒரு நிலை இருந்து வந்ததால் எமது கிராமிய பாரம்பரிய புத்துயிர்ப்பு வேகம் போதாமலேயே வளர்ந்து வந்துள்ளது. இப்பொழுதுதான் ஒற்றையாட்சிக்குட்பட்ட ஓரளவு அதிகாரப்பரவலாக்கம் அமுல்ப்படுத்தப்பட்டு வருவதால் நாம் அந்தப் பாரம்பரிய புத்தெழுச்சியை ஓரளவுக்கு உருவாக்க முடியுமாக இருக்கின்றது.
இன்றைய நிலையில் பல்வேறு துறைசார் சேவையாளர்கள் சிறப்புடன் வாழக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எமது மொழி, அதன் செழுமை, இலக்கியச் சுவை, தொழிற் பாரம்பரியங்கள், சமூகப் பாரம்பரியங்கள் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டுமெனின் எமது பல்துறை சேவையாளர்கள் அடையாளங்காணப்பட்டு போற்றப்பட வேண்டும். அவர்கள் பணி தொடர நாம் அவர்களுக்கு வசதி அளிக்க வேண்டும். இந்த நல்ல கைங்கரியத்தை ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் இன்று முன்னெடுத்து வருகின்றன என்று நம்புகின்றேன். அதற்கு மேலதிகமாக வவுனியா நகரசபை வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் கலைஞர்களையும், துறைசார் விற்பன்னர்களையும், சமூக சேவையாளர்களையும் இனங்கண்டு அவர்களை வாழ்த்திக் கௌரவித்து மக்களுக்கு இனங்காட்டி வருவது மிகச் சிறப்பான செயற்பாடாகும். இந்த நல்ல கைங்கரியத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டு இவர்களுக்கான கௌரவத்தையும் வாழ்த்துக்களையுந் தெரிவித்து அவர்;களுடன் சேர்ந்து நாமும் மகிழ்வடைவோமாக!
இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டின் அரசியல் முன்னெடுப்புக்களும் அரசியல் வாதிகளின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு பாராளுமன்றம் ஒரு நகைப்புக்குரிய மன்றமாக மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற வேண்டும். அரசினை நேர்வழியில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற வேண்டும். அதுவே பாராளுமன்றம் என்ற உயரிய சபையின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக மிளகாய்த்தூள் கரைசலை ஏனைய உறுப்பினர்கள் மீது வீசியடிப்பதும் அதிகாரத்தில் உள்ளவர்களை அவமதிப்புச் செய்வதும், ஒருவரை ஒருவர் அடித்துத் துன்புறுத்துவதும், தூஷண வார்த்தைகளைப் பிரயோகம் செய்வதும், அவற்றை வெளிச்சம் போட்டு ஊடகங்கள் மூலம் உலகறியச் செய்வதும் எமக்கு அருவருப்பைத் தருவதுடன் உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியிலும் ஒரு அவப் பெயரை தேடித்தருவதாக அமைந்துள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் வாதப்பிரதிவாதங்கள் வன்முறைகளாக மாற்றமடைய நாம் இடம்கொடுத்தலாகாது.
எது எவ்வாறிருப்பினும் எமது நாடு என்ற வகையில் எம்மைப் பிற நாட்டவர்கள் எள்ளி நகையாடுவதை நாம் இடமளிக்கலாகாது. அரசியல் என்பது எப்பாடுபட்டேனும் எமக்கெதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை பெயரிழக்கச் செய்யும் ஒரு வித்தையாகவே இன்று மாறியுள்ளது. அரசியல் ரீதியாக ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் மீது சேறு அள்ளிப் பூசுவதே அரசியல் என்று ஆகிவிட்டது. மக்கள் நலம் இச் சேறு பூசலின் போது அடிபட்டுப்போய் விடுகின்றது. சேறு பூசலும் அதற்கெதிரான செயற்பாடுகளுமே முதன்மை அடைகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட பேரம் பேசப்பட்டதாக ஊடகங்கள் பிழையான பல தகவல்களை வெளியிட்டு வந்துள்ளன. எனக்கு தெரிவித்த அளவில் அவர் வேடிக்கையாகக் கூறிய ஒரு விடயத்தைப் பதிவு செய்து, ஊடகங்கள் அதை ஊதிப் பெருப்பித்து மக்கள் மனங்களில் அவரைப்பற்றிய ஒரு தப்பபிப்பிராயத்தை உருவாக்க முயன்றுள்ளன என்பதே உண்மை எனக் காண்கின்றேன்.
சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் நான் பெரிதாக நெருங்கிப் பழகாத போதும் அவரின் நடைமுறைகள் அவரை ஒரு துரோகியாகக் கணிக்கக்கூடியவாறு எந்நிலையிலும் அமைந்திருக்கவில்லை. எமது மக்கள் நீண்ட காலப் போரின் பின்னராக அனுபவிக்கின்ற துன்ப துயரங்களில் இருந்து இன்றைய நிலையில் ஓரளவாவது அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் தம்பி சிவசக்தி ஆனந்தனின் எண்ணக்கருவில் உருவாகியுள்ளன போன்ற சிறப்பான திட்டங்களும் முன்மொழிவுகளும் ஏனைய அரசியல்த் தலைவர்களினது எண்ணங்களிலும் உருவாக வேண்டும். மாறாக உண்மை பேசுபவர்களை அடக்கியாள முனைவதும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுபவர்களை உயரே தூக்கி வைத்து கொண்டாடுவதுமான நிலையே இன்று அரசியலில் வலுப்பெற்றுள்ளது. இந்த அரசியல் நிலை மாற்றப்பட வேண்டும்.
எமது அரசியல் முன்னெடுப்புக்களில் சட்டத்தின் வாயிலாக அரசியல் யாப்பு ரீதியாக எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துக்களைப் பெற்றுக் கொடுப்பதையே நான் முதன்மைப்படுத்தி வருகின்றேன். கிடைப்பதை எடுப்பதே உசிதம் என்று வாழ்ந்து வரும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் நிலை அங்கத்தவர்களுக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் எனது செயற்பாடு சற்று விசனத்தை உண்டுபண்ணியிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. எனினும் எனது செயற்பாடுகள் நாம் மக்களுக்கு 2013ல் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை மக்கள் கவனிக்க வேண்டும். எமது மக்களின் விடிவிற்காக அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக அவர்களுக்கான உரித்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம். இந்த நாட்டில் தமிழ் மக்கள் சகல உரித்துக்களுடனும் சமஸ்டி முறையிலான ஒரு அரசியல் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்.
ஆனால் எம்முடன் ஒத்த அரசியல் கருத்துக்களைக் கொண்;ட கட்சிகள் கூட பல்வேறு திசைகளில் பயணப்படுகின்ற நிலை ஒன்று உருவாகி வருகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும். தத்தம் கட்சி ரீதியான அவர்களின் சிந்தனைகளே பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. இந்த நிலையில் மேலும் ஒரு கட்சி அவசியமா என்று சிலர் கேட்கின்றார்கள். நான் புதியதொரு கட்சியை உருவாக்கியதன் ஊடாக ஏனைய கட்சிகளுடன் பகைத்துக் கொண்டேன் என்றோ அல்லது அவர்களை உதாசீனம் செய்து விட்டேன் என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ஒத்த கருத்துடையவர்களைச் சேர்த்துக் கொண்டு தமிழ் மக்களின் விடிவுக்காக ஒரு நேர் வழியில் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அரசியல் முன்னெடுப்பின் ஊடாக எமது இலக்கை அடைய முயற்சி செய்யவே விரும்புகின்றேன். என்னோடு இணைந்து கொண்டு சேவையாற்ற விரும்புகின்ற அனைவரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றேன். கட்சிகளுக்கிடையே உள்ள பேதங்களை மறந்து எமது மக்கள் நன்மை கருதி ஒற்றுமையுடன் உழைக்க முன்வாருங்கள் என அனைவருக்கும் இச் சந்தர்ப்பத்தில் பகிரங்க அழைப்பு மூலம் அழைப்பு விடுக்கின்றேன். எனினும் எமது கொள்கைகளுக்கு மாறாக இதுவரை செயற்பட்ட தமிழர் விரோதக் கட்சிகள் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வந்தாலுங் கூட அவர்களை இணைத்துக் கொள்வது கடினம்.
இந்நிலையில் பொதுமக்களிடையே இனவாதங்கள், மதவாதங்கள், சாதிப் பிரிவினைகள், பிரதேச வாதங்கள் ஆகியவற்றைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவு பட வைத்து தமது காரியங்களை இலகுவாக முன்நகர்த்துகின்ற அரசியல்வாதிகள் சிலர் என் மீது பழி சுமத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நகைப்பிற்குரியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நான் கலைத்துவிட்டதாக ஒரு சாரார் குற்றஞ் சாட்ட இன்னொரு சாராhர் எனக்கு அரசியல் அனுபவம் எதுவும் இல்லை என்கின்றார்கள். பிழையான கருத்துக்களின் அடிப்படையில் ஒற்றுமையைப் பேணுவதில் எமது மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படாது. ஒற்றுமை என்பது தகுந்த கொள்கை ரீதியான அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும். அடுத்து அவர்கள் கூறுவது போல அரசியல் அனுபவம் என்பது உண்மைக்குப் புறம்பான விடயங்களை அவ்வவ்போது மக்கள் நம்பக்கூடிய வகையில் உரத்துப் பேசி அவர்களை நம்ப வைக்கின்ற தன்மையே என்றால் போலிப்பித்தலாட்டம் ஆடுவதே அரசியல் அனுபவம் என்றால் அந்த அனுபவம் என்னிடம் இல்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு எமது மக்களை ஏமாற்றத் தெரியாது. அவர்களுக்கு உண்மைக்குப் புறம்பான விடயங்களை உண்மை போல எடுத்துக்கூறத் தெரியாது. அதனால்த்தான் எமது தலைவர்கள் எதிர்பார்த்த கைப்பொம்மையாக என்னால் ஆட முடியாது போனது.
எமது மக்கள் பலர் எமது மக்கள் சந்திப்பின் போது என்னிடம் எடுத்துக் கூறிய துயர சம்பவங்களும் அவர்களால் தீர்க்கமுடியாத கவலைகளுந்தான் என்னைக் கல்லாக இறுக வைத்து விட்டது. அவர்கள் துயர் துடைக்க வெறுமனே அண்டிப் பிழைத்தல் வழியாகாது என்ற முடிவுக்கு வந்தேன். இதனால்த்தான் எனது பதவிக்காலம் முடிவுற்ற நிலையிலும் நான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஒரு வாடகை இல்லத்தில் வசித்து வருகின்றேன். எனது கொழும்பு வாசஸ்தலத்தில் பிள்ளைகள், பேரன் பேத்திகளுடன் அளவளாவி மகிழ்ந்திருக்க வேண்டிய இத் தருணத்தில் நான் அவற்றையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி விட்டு என்னை நம்பி, எனக்குப் பெருந்தொகையான வாக்குகளை வழங்கி, முதலமைச்சராக்கிய வடபகுதி மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் தொடர்ந்தும் எனது மக்களுடன் வாழ்ந்து வருகின்றேன்.
2013ல் ஒரு இலட்சத்து முப்பத்திமூன்றாயிரம் பேர் சேர்ந்து எனக்கு வாக்களித்திருந்தார்கள் என்றால் இப்பொழுது கட்சி ரீதியாகப் பிரிந்து செல்பவர்களுக்கு மேலதிகமானோர் கொள்கை ரீதியாக என்னுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதைக் காண்கின்றேன். எனவே போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள் என்று எனது அருமை மக்களிடம் நான் கூறி வைக்கின்றேன். வடக்கில் இருந்தாலென்ன கிழக்கில் இருந்தாலென்ன எப் பகுதிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள், தமிழ் உறவுகள் என்ற நிலைப்பாட்டில் எமது முன்னெடுப்புக்கள் அமைய வேண்டும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஆதரவு என்றென்றும் கிட்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இன்றைய இந்த நிகழ்வில் பாராட்டுக்களைப் பெறும் அனைத்து பல்துறை விற்பன்னர்களையும் இத் தருணத்தில் வாழ்த்திக் கொண்டு எனது அன்பிற்குரிய சகல வன்னி மக்களுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்