தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதன்போது சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 446 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு முடிகிற வரையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.