யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு உள்ளூராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், வடக்கு போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், மாநகரசபை ஆணையாளர், முதல்வர், நுகர்வோர் பாதுகாப்புசபை பொறுப்பதிகாரி, அளவீட்டு நியமங்கள் பணயக அலுவலர், பொலிசார் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
யாழ் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், ரக்ஸிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி தொடக்கம் கீழ்வரும் கட்டணங்களையே அறவிட முடியும்.
அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள்முதலாவது கிலோமீற்றருக்கு 70 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்திற்கான காத்திருத்தல் கட்டணமாக 2 ரூபாவும் அறவிட முடியும்.
இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5மணி வரை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்திற்கான காத்திருத்தல் கட்டணமாக 2 ரூபாவும் அறவிட முடியும்.
அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை சேவையில் ஈடுபடும் ரக்ஸிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்திற்கான காத்திருத்தல் கட்டணமாக 3 ரூபாவும் அறவிட முடியும்.
இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5மணி வரை சேவையில் ஈடுபடும் ரக்ஸிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்திற்கான காத்திருத்தல் கட்டணமாக 4 ரூபாவும் அறவிட முடியும்.
இந்த கட்டண விபரங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் முச்சக்கர வண்டி மற்றும் ரக்ஸி சங்கங்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.