ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதுடன் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் எங்கு சென்றாலும் இனி ஆலையைத் திறக்க முடியாது என தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள் கூறிவந்தனர்.
இந்தநிலையில் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததனையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என நேற்றையதினம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது