ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் அமைச்சரவையின் தலைவராக செயற்பட்டு, அமைச்சரவையையும் தக்கவைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியுமா என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் விலகி இன்னொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதன் மூலம் அவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளமை காரணமாக அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவம் இழக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற ஏற்பாடுகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ள அவர், பாராளுமன்ற அங்கத்துவம் இழக்கப்பட்டவர்கள் இங்குள்ளதாகவும் இது குறித்து தெரிவுக்குழு ஒன்றை உருவாக்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேவேளை எந்த பதவியிலும் நீடித்திருக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரும்பவில்லை என்றும் அரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது என்பதில் தாம் திட்டவட்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சுநத்திரக் கட்சி எதிர்க்கட்சியில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அவர், சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் அமைச்சரவையின் தலைவராக செயற்பட்டு, அமைச்சரவையையும் தக்கவைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.