கிளிநொச்சிக்கே அதிக பாதிப்பு!!
வடக்கில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கினால்18585 குடும்பங்களைச் சேர்ந்த 60345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கில் தொடரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக . அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இவ் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 3291 குடும்பங்களைச் சேர்ந்த, 10332 பேர் 34 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 224 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 11688 குடும்பங்களை சேர்ந்த 38534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2064 குடும்பங்களைச் சேர்ந்த 6882 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, வவுனியா மாவட்டத்தில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு ஆரம்பகட்ட நிதியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.