குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் வங்காலையில் 1985ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொது மக்களுமென 10 பேர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தன்; 34 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (6) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் வங்காலை தூய ஆனாள் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் சுடர் ஏற்றி அருட்தந்தை மேரிய பஸ்ரியன் அடிகளாருடைய சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து படு கொலை செய்யப்பட்ட 10 பொது மக்களுக்கும் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது வங்காலை பங்கினைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.