அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள் மற்றும் மோதல்கள் குறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கவும் மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
வெளிநாடு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் இது தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்த குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது