பிலிப்பைன்ஸ் நாட்டை சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தெ வரவேற்றார். அத்துடன் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் அணிவகுப்புடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு, 58 வருடங்கள் ஆகின்ற நிலையில், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலா நகரின் நிநோயி விமான நிலையத்தை இன்று சென்றடைந்துள்ளார்.
1961இல், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கொழும்பில் தமது தூதரகத்தை திறந்ததுள்ளது. 1973இல் சிறிமாவோ பண்டார நாயக்கா, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு முதன் முதலில் விஜயம் மேற்கொண்டார். அதன் பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் இன்று ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விவசாயம், பொதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணம், இலங்கை – பிலிப்பைன்ஸ், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக, கலாசார தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.