கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம்….
முல்லைத்தீவு மாவட்டத்தினந் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செம்மை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் அருகில் அமைக்கப்படும் பௌத்த விகாரை சடட விரோதமானது என்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கூறியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த தகவலை வெளியிட்டுள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம், எந்தக் காலத்திலும் அங்கு பௌத்தர்கள் வாழ வில்லை என்றும் பௌத்திற்கும் அப் பிரதேசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
செம்மலை பிள்ளையார் ஆலயம், அப் பகுதி மக்களால் காலம் காலமாக வழிபடப்பட்டு வந்த ஆலயம் ஆகும். போரின் பின்னர், மக்கள் மீள்குடியேறச் சென்றபோது, அங்கு இராணுவத்தால் புத்தர்சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு பௌத்த பிக்கு ஒருவர் வந்து அங்கு பௌத்த விகாரை ஒன்றை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கு இராணுவத்தினரும், தொல்லியல் திணைக்களத்தினரும் உதவிகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் செம்மலை நீராவியடிப் பிள்ளையாருக்கு பொங்கல் விழா எடுக்க முற்பட்ட வேளையில் அப் பகுதிக்கு வந்த தென்னிலங்கை பெரும்பான்மையின மக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி பொங்கல் விழாவிற்கு இடையூறு விளைவித்தனர்.
பௌத்தத்திற்கு எந்த தொடர்புமற்ற தமது கிராமத்தில் இவ்வாறு பாரிய பௌத்த விகாரை சின்னங்களை அமைப்பது, தமக்கு பாரிய அச்சத்தையும் கவலையையும் தோற்றுவித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இன்றே தம்மால் ஆலய திருவிழாக்களை கொண்டாட முடியவில்லை என்றால் எதிர்காலத்தில் நிலமை எப்படி இருக்கும் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில், செம்மமை கிராம அபிவிருத்தி ங்கம் ஊடாக தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அமைவாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திடம் குறித்த இடத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் தகவல்களை கோரியதன் அடிப்படையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தொடர்பில் அச் செயலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அங்கு பௌத்த விகாரை அமைக்கவோ, அங்குள்ள அரச காணியில் பிக்கு தங்கியிருக்க அனுமதிக்கவில்லை என்றும் அச் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறித்த காணிகள் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசாங்கம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த அடையாளங்களை திணிக்கும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் செம்மலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.