வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ளார். வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாக அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நடைபெற்ற தேர்தலில் மதுரோ 67 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தியதுடன்.மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய போதும் மதுரோ உச்சநீதிமன்றில் முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் பாராளுமன்ற சபாநாயகரான 35 வயதான ஜூவான் கெய்டோ தான் ஜனாதிபதியாவதற்கு தயாராகி வருவதாக அறிவித்ததனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தலைநகர் கராகசில் நேற்றையதினம் எதிர்க்கட்சி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், சபாநாயகர் இவ்வாறு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.