சீன மொழியில் பேசக்கூடாது எனவும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனவும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இளங்கலைக் கல்வித்திட்ட இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மேகன் நீலி என்பவரே இவ்வாறு பதவிநீக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் கல்விகற்கும் உயிரிபுள்ளியியல் துறை மாணவர்கள் சிலர் கல்லூரியின் பொது இடங்களில் சீன மொழியில் பேசுவதாக வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து அவர் மாணவர்களுக்கு சீன மொழியில் பேசக் கூடாது என மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் இந்த மின்னஞ்சல் ருவிட்டர் மற்றும் சீன சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில் மெகன் நீலியை பலர் இனவெறியர் என குற்றம் சுமத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து அங்கு வந்து படிக்கும் மாணவர்களை பாகுபாட்டுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்துகிறார்கள் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.