சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகி உள்ளார். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக இருவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதுடன் இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்தும் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்pத நிலையில் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21திகதி விலகியிருந்தார்.
சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்றின் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்த போதும் அவரும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி, விசாரணையில் இருந்து விலகியிருந்தார்;
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று வேறொரு நீதிபதியின் அமர்வு முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி என்.வி. ரமணா இந்த வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து திடீரென வழக்கில் இருந்து விலகியுள்ளார். எனவே, இந்த வழக்கில், விசாரணையை தொடங்குவதில் இழுபறிநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது