இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு பற்றிய தகவல் ஏதும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான விபரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இளையராஜா 75 நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை என்றும் மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஆம் திகதி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, சாயிஷா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, ராதா, கார்த்திகா, ஆண்ட்ரியா, தமன், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் பங்கேற்று நடனமாடி, பாடல்கள் பாடி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.