ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை பெப்ரவரி 5ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் நிபந்தனைகளுடன் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இரண்டு முறை ஆலையைத் திறக்க அனுமதி வழங்குமாறு வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும் தமிழக அரசு மனுக்களையும் நிராகரித்திருந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும் ஆலையைத் திறக்கத் தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கிறது எனவும், உடனடியாக ஆலையைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், உடனடியாக ஆலைக்கு மின்சார இணைப்பு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உத்தரவைப் பின்பற்றாதது ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் அளித்து ஆலையைத் திறக்க முயற்சி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீது, கடந்த 29ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம் அன்றைய தினத்திலேயே அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.