தமிழ்நாடு அரச பணியாளர் தேர்வாணயத்தின் உறுப்பினர் நியமனங்களை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அமைப்பாக இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்களை தமிழக அரசு கடந்த ஜனவரி 31ஆம் தகதி நியமித்திருந்தது.
தகுதியில்லாதவர்கள், அரசியல்சார்பு உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த நியமனங்களை ரத்து செய்யுமாறு கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பினை இன்றையதினம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகுதியை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்கள் செல்லுபடியற்றவை எனத் தெரிவித்து அவற்றை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.