301
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கிய நிலையில் வழக்கு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது இடம்பெற்ற விசாரணைகளின் போது , சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிகள் , முறைப்பாட்டாளரிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் போது முறைப்பாட்டாளர் 12 இலட்சம் மற்றும் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை பெற்றுக்கொண்டு, 25 இலட்ச ரூபாய் பணத்தினை மூன்றாவது சந்தேகநபரிடம் கையளித்ததாகவும் , முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களை தெரியாது எனவும் மூன்றாவது நபரிடமிருந்தே இரு காசோலைகளை பெற்றுக்கொண்டு பணத்தை வழங்கியதாக தெரிவித்தார்.
வட்டிகா பணம் வழங்கினார்கள் என சட்டத்தரணிகள் கேட்ட போது , இல்லை கை மாற்றாகவே வழங்கியதாக தெரிவித்தார். 25 லட்சம் பணம் எவ்வாறு திரட்டி கொடுத்தார்கள் என கேட்ட போது , வங்கியில் நகைகளை அடகு வைத்து பெற்றதாக தெரிவித்தார்.
அதன் போது சட்டத்தரணிகள் , வங்கியில் நகைகளை அடகு வைத்து பணத்தினை பெற்றுக்கொண்டால் அதற்கு வங்கிக்கு வட்டி கட்ட வேண்டி வருமே அதை யார் கட்டுவது என வினாவிய போது , அதனை தானே கட்டுவதாக தெரிவித்தார். அவ்வளவு நல்லவரா நீர் ? என கேட்டதற்கு மௌனமாக இருந்தார்.
அதனை தொடர்ந்து மூன்றாவது நபர் உம்மிடம் காசோலையை தந்து பெற்றுக்கொண்ட பணத்தை வட்டிக்கு வழங்குபவர் என தெரியுமா ? என கேட்டதற்கு ஆம் என பதிலளித்தார். உம்மிடம் கைமாற்றாக வாங்கி அந்த பணத்தினை வட்டிக்கு வழங்குவது உமக்கு தெரிந்திருக்கு என கேட்டதற்கும் ஆம் என பதிலளித்தார்.
மூன்றாவது நபர் உம்மிடம் வாங்கிய பணத்தை வட்டிக்கு இன்னொருவருக்கு கொடுத்துள்ளார். அந் நபரை தெரியுமா ? என கேட்டதற்கு இல்லை என பதிலளித்தார். மூன்றாம் நபர் வட்டிக்கு கொடுத்த நபர் தற்போது உயிருடன் இல்லை என்பது தெரியுமா ? என கேட்டதற்கு ஆம் என்றார். அது எப்படி தெரியும் என கேட்டதற்கு , பத்திரிகை பார்த்து அறிந்து கொண்டேன் என்றார்.
அவற்றை தொடர்ந்து நடைபெற்ற மேலதிக விசாரணைகளையடுத்து குறித்த வழக்கினை மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
Spread the love