யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வாளர்கள் மற்றும் விருந்தினர்களை உள்வாங்கி நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு.
கடந்த 6-8, பெப்ரவரி 2019, யாழ். பல்கலைக்கழகம் விழாக்கோலம் கொண்டிருந்ததெனில் அது மிகையாகாது. பல்கலை நுழைவாயில் தொடக்கம் கைலாசபதி கலையரங்கு மற்றும் விஞ்ஞான பீடமென அத்தனை இடங்களும் “AMCEHA 2019” என்ற வாசகங்களையும், வர்ணக்கொடிகளையும் தாங்கிக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது. ஆம், யாழ். பல்கலைக்கழகமும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகங்களுக்கான உயர்தரத் திரவியங்கள் [Advanced Materials for Clean Energy & Health Applications – AMCEHA] தொடர்பான சர்வதேச மாநாடு கடந்த பெப்ரவரி 6-8 தேதிகளில் நடைபெற்றமையே யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த விழாக்கோலத்திற்கான காரணமாகும்.
நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டு ஆய்வாளர்கள்
யாழ். பல்கலைக்கழக வரலரற்றில் முதன்முறையாக 120 வெளிநாட்டு ஆய்வாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும், விருந்தினர்களினதும் பங்குபற்றலில் மிகச்சிறப்பாக நடந்தேறியது இந்த சர்வதேச மாநாடு. நோர்வே, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பங்களாதேஷ், சூடான், சுவீடன், பின்லாந்து, எகிப்து, சீனா, யப்பான் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா என பங்குபற்றிய வெளிநாட்டவரின் பட்டியல் நீண்டு செல்ல, வருகைதந்த விருந்தினர்கள் அனைவரும் யாழ். பல்கலை நுழைவாயிலிலிருந்து மங்கல இசை முழங்க தமிழ்மரபுப்படி கலையரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர்.
நிகழ்வின் முதலமர்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றமை நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டவரை பூரிப்படையச்செய்தது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் அனைவரும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு அவர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இது தவிர முதலமர்வின் முக்கிய நிகழ்வாக யாழ். பல்கலைக்கழகத்திற்கும் நேர்வே ஹெக்ஸ்கோன் (GEXCON) நிறுவனத்திற்குமிடையேயான ஒப்பந்தமும், மேற்கு நோர்வே பல்கலைகழகத்திற்கும் கண்டி தேசிய அடிப்படைக்கற்கைகள் நிறுவகத்திற்குமிடையிலான (National Institute of Fundamental Studies) ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டன.
நிகழ்வின் காரணகர்த்தா கௌரவிக்கப்பட்டார்.
யாழ். பல்கலைகழகம் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் 220 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தக் கைச்சாத்திடலின் முக்கிய பங்காற்றியவரும் இம்மாநாட்டு தவைவர்களிலொருவருமான பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை அவர்களை யாழ். பல்கலைக்கழகப் பேரவை சார்பாக துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் கௌரவித்தமை முதல்நாள் முதலமர்வின் இன்னுமோர் மிகமுக்கிய நிகழ்வாக அமைந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும.
தலைசிறந்த விஞ்ஞானிகளின் சிறப்புரைகளும், ஆய்வாளர்களின் சுவரொட்டிக் காட்சிப்படுத்தலும்
முதல்நாளின் இரண்டாம் அமர்வானது உலகப்புகழ்பெற்ற தலை சிறந்த விஞ்ஞானி;களின் சிறப்புரைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வில் இடம்பெற்ற சிறப்புரைகள் முக்கியமாக சூரியப்படலிற்கான உயர்தர திரவியங்கள் மற்றும்; சுகாதாரப்பாவனைக்கான திரவியங்கள், சக்திச் சேமிப்பிற்கான திரவியங்கள் என்னும் கருப்பொருட்களை மையமாகக் கொண்டிருந்தமையும் சிறப்பம்சம் ஆகும். முதல்நாளின் இறுதிநிகழ்வாக ஆய்வாளர்களின் ஆய்வுகள் சுவரொட்டிகளாக காட்சிப்படுத்தப்பட்டன. ஆய்வுச் சுருக்கங்களைச் சுவரொட்டிகளாகக் காட்சிப்படுத்தியது, தவிர ஒரு நிமிடத்தில் அதுபற்றிய ஒரு தெளிவூட்டலை பார்வையாளர்களுக்கு வழங்கவும் ஆய்வாளர்களிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொரு விடயமாகும்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் நான்கு பெரும்பிரிவுகளான சூரிய சக்தி, சுகாதாரப் பிரயோகத்திற்கான மேம்பட்ட திரவியங்கள், உயர்தர செயற்பாட்டுத் திரவியங்கள் (Advanced Functional materials) மற்றும் காற்று, ஐதரசன், உயிர்ச்சக்தி மற்றும் சேமிப்பு என்பவற்றின் கீழ் இடம்பெற்றது. ஒவ்வோர் பிரிவிலும் சிறப்புரைகளும், உயர்தர ஆய்வுக்கட்டுரை வாசிப்புக்களும் இடம்பெற்றன. ஒட்டுமொத்தமாக நூற்றுக்குமேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டமை இம்மாநாட்டின் ஓர் சிறப்பம்சமாகும்.
இரண்டாம் நாளின் இறுதி அமர்வாக யாழ். பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் குழுத் (University Research Committee) தலைவர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜாவின் தலைமையில் நடைபெற்ற கருத்துப்பகிர்வானது மாநாட்டில் முக்கியமாகப் பேசப்பட்ட விடயங்களில் ஒன்றானதெனில் அது மிகையாகாது. இந்நிகழ்வின் போது இவ் வெற்றிகரமான மாநாட்டின் தொடக்கம் முதற்கொண்டு நிறைவுவரையான நிகழ்வுகள் மீட்டிப் பார்க்கப்பட்டது.
கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியற்பீடத்தில் தூயசக்திப் பிரயோகம் சம்பந்தமான இலங்கை – நோர்வே பயிற் பட்டறை
இம் மகாநாட்டின் நிறைவு நாளான, 8 பெப்ரவரி, 2019 அன்று, கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியற்பீடத்தில் இலங்கை – நோர்வே பயிற்;பட்டறை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் சர்வதேச, தேசிய மற்றும் உள்ளுரிலிருந்து பங்குபற்றிய தூயசக்தித் தொழிநுட்பபுலம் சார் விற்பன்னர்கள், முகாமையாளர்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களென பலதரப்பட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் அமர்வுகள் மேற்கு நோர்வே பல்கலைக்கழக பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை மற்றும் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அற்புதராஜா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த இந்த சர்வதேச மாநாடானது, யாழ். பல்கலை வரலாற்றில் தன் தடத்தை ஆழமாகவும் உறுதியாகவும் பதித்திருந்ததோடு விருந்தினர்கள், பார்வையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களென அனைவரது பாராட்டுக்களையும் தாங்கி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதொரு மகாநாடாகவும் அமைந்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. சர்வதேச மகாநாட்டு இணைத்தலைவர்களாக மேற்கு நோர்வே பல்கலைக்கழக பௌதிகவியல் மற்றும் தொழநுட்;ப பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளையும், யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜனும் செயற்பட்டார்கள்.