எதிரெதிர் துருவங்களாக இருந்த முக்கிய இரு கட்சிகளை இணைய வைத்ததன் ஊடாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதியதொரு கலாசாரத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளர்.
இலங்கையில் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்பு உறுப்பினரை பொதுமேடை ஒன்றில் பெருமையாக பேசுகின்ற கலாசாரம் கடந்த காலங்களில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அத்தகையதொரு கலாசாரத்தினை தாம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏற்படும் மாற்றம் கவலையளிக்கின்ற போதும் இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் பயணம் மற்றும் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளமை ஆகியவற்றை முன்னிட்டு நேற்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.