ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தளர்வை ஏற்படுத்துதற்கு சர்வதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர் முன்னைய ஆட்சி தொடர்ந்திருந்தால், மகிந்த ராஜபக்ஸவுக்கு கைவிலங்கு மாட்டி மின்சாரக்கதிரைக்குக் கொண்டுபோயிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றையதினம் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜெனீவாவில் தற்போது இலங்கையை பலவீனபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு, இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை மூலமாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளது. ஆகவே, இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்கள் குறித்து கடந்த 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூலமாக பிரேரணை முன்வைக்கப்பட்ட போதும் அதனை அப்போதைய மகிந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் 2015ஆம் ஆண்டிலும் மகிந்த ஆட்சியில் இருந்திருந்தால் அவருக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்து அவரை கைவிலங்கு மாட்டி மின்சாரக்கதிரைக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரேரணையை இலகுபடுத்துவது குறித்து சர்வதேச நாடுகளுடன் தாம் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும் இந்தப் பிரேரணையில் இருந்து விடுபட நடவடிக்கை எடுத்து சர்வதேச நகர்வுகளை சரியாக முகாமைத்துவம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.