குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று புதன் கிழமை 22 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
யுத்ததின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் தமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த முசலி பகுதியில் அதிகளவான அரச காணிகள் இருக்கும் போது தங்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் தங்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் கடக்க போகின்ற நிலையில் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட அரசங்க அதிபரோ தங்களுடைய பிரச்சினை தொடர்பாக தங்களை சந்திக்கவோ கேட்டறியவோ இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் தொடங்கிய அன்றே தாங்கள் முசலி பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ள போதும் இது வரைபிரதேச செயலாளர் தங்களை சந்திக்காதது தங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது என அந்த மக்கள் தெரிவித்துளள்ளனர்.
எந்த அதிகாரிகள் வாராது விட்டாலும் சரி எங்கள் காணிகளை மீட்கும் வரை எங்கள் போரட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது