சபரிமலையில் சன நெரிசலில் சிக்கிய பக்தர்களில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் திகதி கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மண்டல பூஜை இன்று நடைபெறுவதையொட்டி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஐயப்பனுக்கு சாத்தப்படுவதற்காக தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானம் வந்தடைந்த போது சன்னிதானத்துக்கும் மாளிகைபுற கோயிலுக்கும் இடையே குவிந்திருந்த பக்தர்கள் தங்க அங்கியை தொட முண்டி யடித்ததால்; ஏற் பட்ட கூட்டநெரிசலில் 25 பேர் படுகாயம் அடைந்தநிலையில் அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2011 ஜனவரியில் சபரி மலையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 106 பக்தர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது